வியாழன், 16 ஏப்ரல், 2009


இருட்டுச்சுகம்தனை

இருட்டும் முன்பே

திருட்டுத்தனமாய்த் திருடும்கூட்டத்தால்

காமப்பேய்களின் கலவியில் கூடலில்

கருவாய்த்தறித்த சிசுவதை

சிதைத்தல் வதையல்ல-அதை

உருவளர்த்துப் பெற்றுவீசி...

சாலையோரங்களில்

பேருந்து நிறுத்த மனிதக்காலடிகளில்

பசிக்காகக் கையேந்தி அழும்

அனாதை அம்மணக்குழந்தையாய்..

என் இதயம் திருடி

எங்கு வீசிப் போனாய்.... (தென்றல்சக்தி)

திங்கள், 13 ஏப்ரல், 2009




யுத்தம் இன்றி வெற்றி இல்லை

யுத்தம் இன்றி வெற்றி இல்லை...

வலது கையில் வைரம்

வ்யிற்றுப் பசிக்கு ஏன் அழுகை

கிணருமுழுதும் தண்ணீர்

பயிர்களுக்கு ஏன் வாட்டம்?

அறுவடை செய்யாது...

அடிமை விலங்கை அழகு பார்த்து

அவதியுருகிறாய்-

யுத்தமின்றி வெற்றியில்லை

யுத்தமின்றி வெற்றியில்லை

கனி வேண்டுமென்றால்

கண்ணை மூடிக் கனவு

கண்டால் கைக்கு

வந்து சேர்ந்திடுமா?

காம்பில் குறி வைத்து வீழ்த்து..

வலது கையில் வைரம்
வ்யிற்றுப் பசிக்கு ஏன் அழுகை?

ஓட்டைப் படகில் ஒடுங்கிக்கொண்டு

முடங்கிக் கிடந்து

மூழ்கிப்போக அல்லவா

முயல்கிறாய்!

புதிய படகில் துடுப்பிருக்க

இருதயத்திலும் துடிப்பிருக்க

துணைக்கு வர ஆளிருக்க

துணிந்துவர மறுப்பெதற்கு?

வலது கையில் வைரம்

வையிற்றுப் பசிக்கு ஏன் அழுகை?

போர்க் கருவிகளையெல்லாம்

புல்லாங்குழலாக்கி ஊதினோம்

சலித்தபோது புலுதியில் அல்லவா

தூக்கி எரிந்தோம்...

தூக்கியெறிந்துவிட்டு

வாலாட்டி நின்றோம்

நன்றிமிக்க நாய்கள் போல..

பித்துப்பிடித்ததால் அல்லவா

யுத்தக் கப்பல்களையெல்லாம்

புத்த மடமாக்கிவிட்டோம்...

போர் முரசை விற்று விட்டோம்

பொழுது போக்குச் செலவுக்காக...

சவுக்கிருக்கும் சாட்டைகளை

மூட்டைகட்டி மூலையில்

போட்டுவைத்து...

அவ்வப்போது எடுத்துச் சுழற்றினோம்

பம்பரம் சுழற்ற...

பேச்சிருக்கும்வரை பேசவும்

மூச்சிருக்கும்வரை போராடவும்

கற்றுக்கொள்...மூழ்கும் முன்பே!

குளத்தில் மீன்பிடிக்க

சேற்றில் இறங்கவேண்டும் என்றா

காற்றில் மீன் பிடிக்க

கற்பனை வலை வீசி

காலமெல்லாம் காத்துக்கிடக்கிறாய்?

பூக்களைப் பறித்துப் பறித்து

கைகளையெல்லாம்

மென்மையாக்கி விட்டாய்-தோழா

மலையைப் புரட்டவேண்டும்

என்பதையே மறந்துவிட்டாயா?

இன்னிசை கேட்டுக்கேட்டு

பழகிவிட்டதால் அல்லவா

இடி ஓசை கேட்டதும் பயம்?

தேக்கு மரத்தைத் தூக்கமுடியாமலா

வாழைத்தண்டை விட்டமாக்கி

வீடு கட்டமுயல்கிறாய் தோழா?

பாலை வனத்தை நினைத்து

பயப்பட்டுப் படுத்திருக்கிறாய்-நீ

புறப்பட்டுப் போனால் அங்கே

புதுச்சோலைவனம்

மலர்ந்துகிடக்கிறது உனக்காக...

இனியாவது தோழா

உறுதிப்படுத்திக்கொள்

உள்ளங்கைகளை மட்டுமல்ல

உன் உள்ளத்தையும்..

ஏனெனில்

யுத்தமின்றி வெற்றியில்லை!
யுத்தமின்றி வெற்றியில்லை!
(தென்றல் சக்தி)


வியாழன், 9 ஏப்ரல், 2009


எரிமலைச் சேற்றிடை
சிறு பூ எனினும்
பரிபடை சூழ்ந்தெனை
உறுதுயர் தரினும்
விரி அரவு தீண்டி
நறு விடமிடினும்
நரிவாய்ப்பட்டே
நானழிந்தொழினும்-இப்படி
இன்னல் என்னிடை
வந்திடும் எனினும்; இல்லை
மன்னன் ஒருகுடை
மண்ணிடை எனினும்
என்னுயிர் இங்கு
மென் கருவறை புகுமா
இன்னொரு முறையும்
என் தாய்மடி பிறக்க...

வியாழன், 12 மார்ச், 2009

புரிந்தவர் தெரிந்து கொள்ள-தெரிந்தவர் புரிந்து கொள்ள

புன்னகை ஊற்றாய்
வெண்மதிக் கீற்று
வெளியினை நனைக்கும்
இருளினைக்கரைக்கும்

அந்தகாரம்... அந்தகாரம்...
போதும் போதும்
வந்ததூரம் சந்தனச்சேறு தேடி
இந்தப்பாதம்...

யாரது கேள்வி
கேட்பது வாழ்வில்.?
வாழ்க்கைகள் யாவும்
வேட்கைகள் தீது
பூக்களின் பாரம் காற்றினில் தீரும்

இங்கே
போனதும் வந்ததும்
ஆனதும் தந்ததும்
ஆனந்தத் தாண்டவ
பூந்தளிர் மண்டபம்...
இருப்பதும் பார்ப்பதும்
மறுப்பதும் சேர்ப்பதும்
மானிடச்சாபத்தின்
கல்லறைத்தேடல்கள்...

காலமும் நேரமும்
சித்திரை நிலவாய்
யோகமும் யாகமும்
முத்திரை அலகாய்... எனவே

கண்டிடு கண்டிடு - கண்டு அதை வென்றிடு
வென்றிடு வென்றிடு - வென்று அதை விண்டிடு
விண்டிடு விண்டு - விண்டு அதில் நின்றிடு
நின்றிடு நின்றிடு - நின்று அதைத் தந்திடு
தந்திடு தந்திடு முற்றுகை வேட்கை
தண்டனைச்சிறைகள் தூள் பட ஒடிய
வந்தனக்குரலில் வாழ்வது விடிய....

இங்கே கண்ணிமை போல
கவச குண்டலம் - அது
சகத்தினை வெல்வது
சர்வநிச்சயம்...

ஏனெனில்... இங்கே
புன்னகை ஊற்றாய்
வெண்மதிக்கீற்று....

வியாழன், 5 மார்ச், 2009

வெற்றி எளிதே...



வெற்றிகள் என்பதிங்கு எளிதே...
நீ வென்றால்!

வெல்வதெப்படி?

வெற்றியின் சூட்சுமம்
உணர்ந்து தெறி..
சூட்சுமம் தெரிந்தவன்
வெல்வன் எதுவும்...


எனவே.. எனவே..
சுட்சுமம் கற்றுக்கொள்
வெற்றியைப் பெற்றுக்கொள்...

ஆழ்மனம் கண்டவன்
அகிலமே அறிவான்
தன்மனம் தெரியான்
தன்னையே அறியான்!

கணில்லாக் குருடற்கு கற்பனையே வெளிச்சம்

ஒலிகேட்காச் செவிடற்கு கண்ணொளியெ வெளிச்சம்

அங்கம் இல்லா முடவற்கோ ஆறறிவே வெளிச்சம்

மொத்தமுமே சுத்தமெனில் ஐம்புலனும் வெளிச்சம்

உண்மையது.. உண்மையெது
முற்றுணர்ந்து நுகர்ந்தே
கற்றவனும் விக்கி நிற்க
கற்றுக்கொள் சூட்சும வெளிச்சம்!

என்னென்று ஏதென்று
எங்கு சென்றும் தேடல் வேண்டாம்
ஏதெனில் யாதெனில்...

: உடனுரை ஐம்புலன்
உணர்ந்தாய் சூட்சுமம்:

இனி வெற்றிகள்
என்பதிங்கு எளிதே எளிதே... (தென்றல்)

புதன், 4 மார்ச், 2009

வருத்தம்




முதியோர் இல்ல வாசலில்
ஓர் வாசகம்....
குஞ்சு மிதித்து
முடமாகிப்போன
கோழிகள் உள்ளே...
காளைக்கு
கழுத்திலே புண்..
அண்டங்காக்கைக்கு
அந்த புண்னிலே கண்..!

திங்கள், 2 மார்ச், 2009

ஏக்கம்...!

தாலேலோ
இலாவணி பாடும் வயதில்
காசு சேர்த்து - நான்
தாவணி வாங்கும் கனவில்

ம்... என்று
தங்கம் சேர்த்து
உடம்புக்குப் பூசி - என்
பருவத்தை திருட்டுக்கு
விற்கப் போகிறேன்...!

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

காதல்


புல் இதழிழ்
பூமியைப்புரட்டிப்போடும்
பலம் இருந்தது அன்று...
ஆனால் சின்னச் சிராய்ப்புகளுக்குக்கூட
உன் மடி தேடி அழும் பலவீனம்
யார் தந்தது இன்று?



புதன், 25 பிப்ரவரி, 2009


பெற்றவைகள்
உற்றவைகள் - இங்கே
பெயரெடுத்துக்
கற்றவைகள் மற்றவைகள்
ஏனோ
அற்றவைகள் ஆனதின்று...
எனக்குச் சற்றவைகள்
வேண்டும் தோழா...
எங்கோ
நேற்றவைகள்
காற்றலையில் தொலைந்ததடா...
தோற்றவைகள் வாழ்வில்
ஆயிரம் தோழா...
தோற்பதற்கு உயிர் வேண்டும்
என்னை எனக்குத் தந்துவிடு...
நினைத்தேன்
நெஞ்சில் வந்து நின்றாய்...
அழைத்தேன்
அருகில் இல்லை என்றாய்...


நினைவில் அணுக முடிகின்ற
அருகில் இருந்தும்
நிகழ்வில் ஏனோ வெகு தொலைவில்...


சனி, 21 பிப்ரவரி, 2009

வெற்றியாதெனில் நட்பே...

ஒருவன் வெற்றி பெற்றால்
அந்த வெற்றிக்கு உலகம் 
பல காரணங்களைச்சொல்லும்..

அவன் தோற்கின் அவனைமட்டுமே
அந்த தோல்விக்கு -உலகம் 
காரணமாய்ச்சொல்லும்..

எனவே தோழா
என்றும் வெல்வது பெரிதில்லை- நீ
என்றும் தோற்காமல் இருப்பதே பெரிது
 


புதன், 18 பிப்ரவரி, 2009

வெற்றி..

வெற்றியென்பது எளிதல்ல.!
வெற்றியென்பது எளிதல்ல -
தோல்வியைப் போல...
பார்வையாளனுக்கு என்றுமே
வெற்றி எளிதான ஒன்றே...
போட்டியாளனாய் உட்புகுந்து பார்
வெற்றி வெல்வதற்கு அரிதானதாகவும்
தோல்விக்கு காரணம் சொல்வதற்கு
எளிதானதாகவும் தெரியும்...
வென்றவனுக்கு வெற்றி எளிதே
ஆனால் அதற்கவன்
கண்டகளங்கள்... கொண்டஇரணங்கள்
உள்ளுறுங்கும் இரகசியம் ஊர் அறியா...
உழைப்பும் வலியும் இரணமுமின்றி
வெற்றி இல்லை...
எனவே வெற்றிக்குப் போராடு
பெயரோடும் புகழோடும் உன்
வாழ்வில் தேரோட...
வெற்றிக்குப் போராடு...

திங்கள், 16 பிப்ரவரி, 2009

ஞானம்...


வாழ்வதற்காகச் செத்து விடு - இனி
சாவதற்காக வாழ்வது எளிது...

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

ஈரத்தென்றல்தொட தேகம் சிலிர்க்கும்
அந்திப்பொழுதுகளில்...
காற்றின் முதுகிலேறிப் பயணம் போகும்
முகிழினம் பார்க்கையில்...
பசுமைச்சீருடை அணிந்த ஒற்றையடிப் பாதையில்
கரையாத பொழுதுகளில் கவனமாய் நடக்கையில்...
இன்னும்...இன்னும்...
மற்றபிற என் தனிமையெல்லாம்
மொத்தமாய்க் குத்தகை எடுத்துக்கொண்டவள் - நீ
எனவே என் அன்பே
என்னில் நான் இல்லை.!
இருப்பது பூ முல்லை நீ மட்டுமே...
ஆதலினால் அன்பே
என்னில் நீ நலம்
உன்னில் நான் நலமா.?


காதலர் தின வாழ்த்துக்கள்..

வியாழன், 12 பிப்ரவரி, 2009

நான் கடவுள்

நான்’ -எனச்சொன்னான் கடவுள்..
அவனது கொடை- பூமி
அவனது விருப்பம் சுழற்சி
அவனது கருணை மழை
அவனது சாந்தம் இரவு
அவனது தாகம் பகல்
அவனது விரக்தி வறட்சி
அவனது கோபம் பூகம்பம்
அவனது சாபம் பிரளயம்
அவனது எச்சம் உயிர்கள்
அவனது நஞ்சு மனிதன்
அவன் சொன்னான்
நான் கடவுள்’’

கனவு

கனவு காணாதே.. அதை நெஞ்சுக்குள் பதியமிடு!
அதற்கு தினம் நீர்வார்த்து நினை!
கனவு முளைக்கும்வரை அடைகாத்து நில்!
துளிர் விட்டதும் வேலியிடு!
கனவுச்செடிசுற்றி கலைகள் களை!
பக்கத்தளிர்களை பக்குவமாய் அகற்று!
அது செழித்து மொட்டவிழும்..
அன்று கனவு நனவாகும்..
நாளைய உலகு உனதாகும்..எனவே
கனவு காணாதே..
நெஞ்சுக்குள் பதியமிடு...

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

உலகே..

அம்மணம் மறைக்கத்தான் ஆடைகள்
ஆனால் இங்கே - ஆடைக்குள்
அனைவரும் அம்மணமே..!